"பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும் பிறை பார்த்து நோன்பை விட வேண்டும் மேக மூட்டமாக இருந்தால் அந்த மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்ய வேண்டும்".
இது நோன்பை ஆரம்பிப்பது மற்றும் முடிப்பது பற்றிய நபி வழி ஆகும். ரமலான் அல்லது ஷவ்வால் பிறை தென்படாத போது ஷஃபான் அல்லது ரமலானை முப்பதாக முழுமை படுத்தவேண்டும்.
இதை நன்கு கவனித்து பார்த்தால் அடுத்த மாதத்தின் ஒரு பிறை தான் முந்திய மாதத்தில் நுழைகிறது அதனால் அடுத்த மாதத்தின் முதல் பிறை என்பது உண்மையில் இரண்டாம் பிறை தான். எனினும் நிர்வாக ரீதியில் நாம் முதல் பிறை என்கிறோம் இது மேற்கண்ட நபி மொழியின் மூலம் தெளிவாகிறது மேலும் இது தான் இஸ்லாமிய உலகின் நடைமுறை ஆகும்.
இதன் மூலம் நமக்கு சொல்லப்படுகின்ற செய்தி என்ன வென்றால் "பிறையில் ஒன்று விடுபட்டாலும் உங்கள் ஒற்றுமையில் துண்டு பட்டு விடக்கூடாது என்பது தான்".
பிறையை அறிவிப்பதற்கு என்று ஒரு நிர்வாகம் உண்டு. அது தான் அதைச் செய்யும். எல்லா நாடுகளிலும் அதன் அரசாங்கம் இதை ஏற்பாடு செய்துள்ளது தனி நபர்கள் பிறை பார்த்தால் அதை அந்த நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் அது அவரது நன்னடத்தையை அடிப்படையாகக் கொண்டு ஏற்கும் அல்லது புறக்கணிக்கும் இது தான் நடைமுறை.
இந்த நடைமுறை இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் உள்ளது நமது தமிழகத்திலும் உள்ளது. அது தான் தலைமை காஜியும் மற்ற மாவட்ட காஜிகளும் ஆவார்கள் இதன் நோக்கமே இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது தான்.
தமிழக முஸ்லிம்கள் இதை மனப்பூர்வமாக ஏற்று செயல்பட்டு ஒற்றுமையை கடைபிடித்தார்கள் அந்த ஒற்றுமையில் எந்த பங்கமும் ஏற்படவில்லை ஆனால் எப்பொழுது நபி வழி சகோதரர்கள் வந்தார்களோ அவர்களுக்கு இந்த ஒற்றுமை கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது ஏனெனில் சமூகம் ஒற்றுமையாக இருந்தால் அவர்களின் கொள்கைக்கு அவசியம் இல்லாமல் போய் விடும் ஆகையால் சமூகத்தை கூறு போட முயற்சி செய்தார்கள் அதற்கு அவர்கள் ஏவிய முதல் அம்பு காஜியின் அறிவிப்பை ஏன் ஏற்க வேண்டும் என்பது தான்.
அதன் பிறகு சர்வதேச பிறை, கணிப்பு பிறை, தவ்ஹீத் காஜியார் பிறை என்று பல பிறைகளும் அதன் அடிப்படையில் பல பெருநாள்களும் வந்து விட்டது
அது மட்டுமல்ல புற்றீசல் போல் பல அமைப்புகளும் அவர்களுக்குள்ளேயே உருவாகியது உருவாகிக் கொண்டிருக்கிறது இனியும் உருவாகும் அப்போது பெருநாட்களின் எண்ணிக்கை இன்னும் கூடும்
ஆக அவர்களின் கொள்கை அவர்களுக்குத்தான் அடுத்தவருக்கு அல்ல மேலும் அவர்களின் கொள்கை அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது அல்ல அப்படி இருந்தால் அவர்களுக்குள் இத்தனை பிரிவுகள் வந்து இருக்காது மேலும் அவர்களில் ஒவ்வொருவரும் அவரது தலைமைக்கே கட்டுப்படுகிறார்கள் மற்ற தலைமைக்கு அல்ல ஏனெனில் அவர்களின் பார்வையில் மற்ற தலைமையும் அமைப்பும் வழி கேட்டில் உள்ளது இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் அவர்கள் எல்லோரும் "நபி வழி" என்று கூறக் கூடியவர்கள் தான்.
அப்படி இருக்கும் போது அவர்கள் நமது தலைமைக்கு கட்டுபடுவார்கள் என்பது சாத்தியமில்லை கட்டுப்பட வேண்டும் என்ற அவசியமுமில்லை எனவே பிறை விஷயத்தில் நாம் சரியான வழியில் தான் பயணிக்கிறோம் நமது வழியை நாம் அவர்கள் மீது திணிப்பதில்லை அது போல் அவர்கள் தங்களது கொள்கையை நம் மீது திணிக்காமல் இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம் ஏனெனில் நாம் அவர்களின் கொள்கையை ஏற்க வில்லை
ஆனால் வலுக்கட்டாயமாக திணிக்கின்றார்கள் இதற்கு அவர்களின் பிறை குழப்பமே சான்று தவ்ஹீத் காஜியார் பிறை அறிவிப்பு என்பது அந்த அமைப்பினருக்கு மட்டுமே. ஆனால் அறிவிப்பு செய்யும் போது ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தையும் குழப்பி அப்பாவி மக்களை சந்தேகத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள்.
இனிமேலாவது தங்களது செயல்பாடுகள் தங்களது அமைப்பினருக்கு மட்டுமே என்று செயல் பட்டால் நல்லது
"அவரவது வழி அவரவருக்கே"
ல(க்)கும் தீனு(க்)கும் வ லிய தீனி
இப்ராஹிம் அன்வாரி
கடையநல்லூர்.


































