Sunday, 29 March 2020

ஹலோ mr. மோடி

இன்றைய தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை.

கரோனோ தொற்றை எதிர்கொள்ள
இந்தியா உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது எதை?

சு.வெங்கடேசன் MP

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கரோனா தொற்றினை எதிர்கொள்ள மொத்த இந்தியாவும் தயாராகிக் கொண்டிருக்கின்ற நிலையில், மருத்துவ துறையில் நம்முடைய நிலை என்ன? நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை கவனம் கொள்வோம். மருந்து உற்பத்தி துறையில் இந்தியா ”சூப்பர் பவர்” கொண்ட நாடு என்றே சொல்லலாம். இன்றளவும் அமெரிக்கா பயண்படுத்தும் மருந்தில் சுமார் ஐம்பது சதவிகிதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. உலகம் முழுவது பயண்படுத்தப்படும் தடுப்பூசி மருந்தில் சுமார் அறுபது சதவிகிதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. 220 நாடுகளுக்கு இந்திய நிறுவனங்கள் மருந்துகளை ஏற்றுமதி செய்கின்றன.
அதனால் தான் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்திய சந்தையில் மருந்துகளின் விலை மிகக்குறைவு. இதற்கு சிறந்த உதாரணம் சொல்வதாக இருந்தால் ஹெச் ஐ வி க்கான மருந்து உலகசந்தையில் ஒரு லட்சமாக இருந்த போது, இந்திய நிறுவனம் சில ஆயிரம் ரூபாய்க்கு அதனை கொடுத்தது. 12500 க்கும் மேற்ப்பட்ட மருந்து தொழிற்சாலைகள் இந்தியாவில் இருக்கிறது. வருடத்துக்கு மூன்று லட்சம் கோடிக்கு நாம் உற்பத்தி செய்கிறோம். அவற்றில் 50 சதவிகிதம் உள்நாட்டு சந்தை. 50 சதவிகிதம் வெளிநாட்டு சந்தை. இவற்றிலும் குறிப்பிட்டு சொல்வதாக இருந்தால் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் 75 சதவிகித உற்பத்தி நடக்கிறது.

மருந்து உற்பத்தி துறையில், இவ்வளவு பெரிய பலத்தோடு இருக்கும் இந்தியா, மருத்துவமனையிலும், உள் நோயாளைகளைப் பரிகரிப்பதிலும் உரிய அரசு பொது மருத்துவம்னைகள்  பலத்தோடு இருக்கின்றதா? என்றால் சற்று தலைகுனியத்தான் வேண்டி உள்ளது. தமிழகத்தில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் என்றால் ஜார்கண்டில் 8200 பேருக்கு ஒரு மருத்துவர் எனும் நிலை. உலகசுகாதார நிறுவனம் சொல்லும் குறைந்த பட்சம் 1000 நபர்க்கு ஒரு மருத்துவர் எனும் நிலை நம் நாட்டில் 6 மாநிலங்களில் மட்டுமே உள்ளது. 6இலும் தமிழகம்தான் முதலிடம் என்பது சற்று நமக்கு ஆறுதலான சேதி. உத்திரபிரதேசம் ஹரியானாவில் நிலைமை தலைகீழ். அங்கே 6000-4000 மக்களுக்கு ஒரு மருத்துவர்தாம்.

குரோனோ தொற்றினைப் பொறுத்தமட்டில், மருத்தவரின் எண்ணிக்கை மட்டும் பத்தாது. மருத்துவமனையின் உயர் சிகிச்சை அவசர சிகிச்சை பிரிவு மிக மிக அவசியம். Hit Hard எனும் வேகமாக சிகிச்சையைத் துவங்க வேண்டிய கட்டாயச் சூழல் இது. இத்தாலி  தோற்றுப்போனதும், சீனம் முதலில் திணறியதும் இவ்விடத்தில்தான்.  நேற்றைய முன் தினம்
அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸின் பல்கலைக்கழகத்தின் நோய்பரவுதல், அதன் பொருளாதாரம் கொள்கைகள் பிரிவின் ஆய்வுத்துறையின் (CDDEP) அறிக்கைகள் நமக்கு பல எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது. அதில் முக்கியமானது 21 நாள் ஊரடங்கில் மட்டும் நோய் நின்றுவிடாது என்பதுதான். இது அவசியம் என்றாலும் "இத்தோடு நோய் போய்விடும்" என அலட்சியமாக இருத்தல் கூடாது எனும் மன நிலை மக்களுக்குக் கூடாது. கூடவே கடும் பொருளாதார நெருக்கடிச் சூழலில், அவர்களின் தடலடியாக கூச்சலான நகர்வு, அதன்பின் ஆபத்தை கொடுக்க வாய்ப்பு அதிகம் என்கிறது அவர்களது ஆய்வுகள்.  முக்கியமாக, தற்போதைய கணக்கீட்டின் படி, சமூக பரவலின் வீரியம் ஏப்ரல் 4இல்துவங்கி ஏப்ரல் 25இல் 25 இலட்சம் நோயாளிகளை அதிக பட்சமாகவும் 12 இலட்சம் பேரை குறைந்த பட்சமாகவும் உள் நோயாளிகளாகவும், அவசரமாகவும்  சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம் என அவர்கள் கணிப்பு கூறுகின்றது.

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுமார் 7,13,986  படுக்கைகள் இருக்கலாம். . சரியாகச் சொல்லப்போனால், 2000 பேருக்கு ஒரு படுக்கை மட்டுமே உள்ளது. அவசர சிகிச்சைப் பிரிவிலோ ஏறக்குறைய முப்பது முதல் ஐம்பது ஆயிரம் வெண்டிலேட்டர்கள் மட்டுமே இருக்கலாம் என்று கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், குரோனோ சிகிச்சைக்கு தேவையான வெண்டிலேட்டர்கள் மொத்தம் 1மில்லியன் என்கிறார்கள்.அதாவது பத்து இலட்சம். அவர்கள் கணக்குகள் நம்மை தலைசுற்றவும், சற்றே பயமுறுத்த வைக்கிறது. அவசர சிகிச்சைப்பிரிவில்சேர்க்க வேண்டிய நோயாளிகளின் எண்ணிகை 8 சதவிகிதமாக இருக்கும் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஒரு சதவிகிதம் என்று எடுத்துக்கொண்டால் கூட நாம் நிலைமையைக் கட்டுப்படுத்தமுடியாத நிலை அடைவோம்.

குரோனா தொற்றுக்கு எந்தவிதமான மருந்துக் கண்டறியப்படாத நிலையில், 14 நாட்கள் நோயாளியின் உயிரைக்காக்கும் கவசமாக வெண்டிலேட்டர் மட்டுமே இருக்கிறது. ஒவ்வொரு வெண்டிலேட்டரும் எண்ணற்ற மனித உயிர்களை காப்பாற்றும். உலக நாடுகள் பலவும் வயோதிகர்களுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். எனவே இன்றைய உடனடி தேவை அரசு மருத்துவமனைக்கான வெண்டிலேட்டர்கள். அவற்றின் எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிகப்படுத்த வேண்டும். அதற்கான திட்டத்தில் மத்திய மாநில அரசுகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும், முடிவெடுக்க தாமதமாகிற ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் எண்ணிலடங்காத மனிதர்களின் உயிரோடு நேரடியாக சம்பந்தப்பட்டது.

அனுமானிக்கும் தேவையில்,  பத்து சதவீததுக்கும் குறைவாக வெண்டிலேட்டர்கள் இருப்பதும், முகக்கவசம் போல் அதிரடியாக அவற்றை வாங்கிக் குவிக்கும் நிலை இல்லாததும், கவனத்தில் கொள்ள வேண்டியது. இச்சூழலில் மிக முக்கியமாக நம் முன்னால் நிற்பது மூன்று விஷயங்கள்.
1. நோய்த்தொற்று வரவிடாமல் அல்லது தாமதப்படுத்தும் இந்த சமூக விலகலை மிக மிக முக்கியமாக ஒவ்வொரு குடிமகனும் புரிந்து நிறைவேற்ற வைத்தல்.
2. இன்னும் அதிகப்படியாக பெருவாரி மக்களை சோதித்து asymptomatic நிலையில் quarantine செய்வதும், ஆரம்பகட்ட நோய் அறிகுறி துவங்கையிலேயே முழு சிகிச்சைக்குத் தயாராவது
3. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை முடிந்த வரை அனைத்து உபகரணங்களுடனும், மருத்துவர்களுடனும் பயிற்சி பெற்ற ஊழியர்களுடனும், மருத்துவர்களுடனும் தயார் நிலையில் வைத்திருப்பது...
Dhinamalar #COVID19 #suve4madurai #MaduraiMPnews